யமஹா ஆர்.எக்ஸ். 100 பைக் மீண்டும் விற்பனைக்கு வர உள்ளது. மகிழ்ச்சியில் பைக் பிரியர்கள் அப்படி என்னதான் இருக்கு இந்த பைக்கில் என்பதை பார்க்கலாம்.

யமஹா ஆர்எக்ஸ் 100 (Yamaha RX 100) 1990களில் இளைஞர்கள் மத்தியில் பெரிது விரும்பப்பட்ட ஒரு பைக். இந்தியாவில் உள்ள இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தது. இன்றளவும் எப்போது இந்த பைக் ரீலாஞ்ச் ஆகும் என்று கூகுளில் அதிகம் பேர் தேடி வருகின்றனர். மறுவிற்பனை செய்வோர் அதிக விலைக்கு விற்கின்றனர், ஆல்டர் செய்து அதை வாங்க நிறைய இளைஞர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
1985 ம் ஆண்டு இந்தியாவில் யமஹா ஆர்எக்ஸ் 100 பைக் உற்பத்தி தொடங்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், 1996ம் ஆண்டு இருந்த கடுமையான உமிழ்வு விதிமுறைகள் காரணமாகவும், மேலும் சுற்றுச்சூழல் மாசடைவதை கருத்தில் கொண்டு இந்த பைக்கின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

அதன் பிறகும் பைக் பிரியர்களுக்கு RX100 பைக் மீது கொண்டிருக்கும் மோகம் இதுவரை துளி அளவும் குறையவில்லை. அதற்கு காரணம் இந்த பைக்கின் சவுண்ட். அந்த சவுண்ட் கேட்டதும் பெரும்பாலோனோர் அந்த பைக்கை திரும்பி பார்ப்பார்கள். நிறைய திரைப்படத்தில் விஜய், தனுஷ் மற்றும் பல பிரபல ஹீரோக்கள் இந்த பைக்கை இன்னும் அவர்களது படங்களில் பயன்படுத்துகின்றனர். அதனால் இன்னும் இதன் மவுசு சிறியவர்கள், பெரியவர்கள் என்று அனைவரிடத்திலும் அதிகரித்துள்ளது.
ஆர்எக்ஸ் 100 பைக்கின் எடை 98 கிலோ மட்டுமே. வெயிட் குறைவாக இருக்கும் காரணத்தால் ஆக்ஸலரேஷன் ஸ்பீடாக இருக்கும். யமஹா இந்த பைக், 98 சிசி, சிங்கிள் சிலிண்டர், 2 ஸ்ட்ரோக், ஏர் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டு இருந்தது. இதில் 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொடுக்கப்பட்டிருந்தது. விரைவாக நிற்க வேண்டும் என்பதற்காக நிறைய பேர் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தினர். இந்த பைக்கில் சில ஆபத்துகளும் இருந்தன, எடை குறைவு என்பதனால் காற்று அதிகமாக வீசும் போது வண்டி சிறிது ஆட்டம் காட்டும்.

நிறைய முறை இந்த பைக்கின் கம்பேக் குறித்து இணையத்தில் தகவல் கசிந்து வந்த நிலையில் யமஹா நிறுவனம் அதை உறுதி செய்துள்ளது. 2024ம் ஆண்டு இந்த மாடல் வர உள்ளதாகவும் அதன் விலை ரூ. 1,50,000 என்றும் தகவல்கள் வெளியாகிறது. 1987ம் ஆண்டு ரூ. 19,764 என்ற விலையில் இந்த மாடல் விற்பனை செய்யப்ப்ட்டது குறிப்பிடதக்கது.
இப்பொழுது வெளியாகும் புதிய மாடலில் ஒலி, செயல்திறன் போன்றவை எப்படி இருக்கும் என்பதை காத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதன் எஞ்சின் நிச்சயம் மாற்றப்பட வாய்ப்பு உள்ளது. இணையத்தில் இது குறித்த விஷயங்களை பைக் பிரியர்கள் ஷேர் செய்ய தொடங்கியுள்ளனர்.