அஜித் நடித்து பொங்கலுக்கு வெளியாக உள்ள துணிவு படத்தின் 2வது சிங்கிள் “காசேதான் கடவுளடா” ரீலிசாகியுள்ளது.
போனி கபூர் தயாரிப்பில் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 3வது திரைப்படம் “துணிவு”. இந்த திரைப்படத்தின் முதல் சிங்கிள் “சில்லா சில்லா” வெளியாகி ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட நிலையில், இன்று இரண்டாவது சிங்கிள் “காசேதான் கடவுளடா” வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த பாடலை ”காக்கா கதை” ஆல்பம் பாடல் மூலம் புகழ் பெற்ற வைசாக், நடிகை மஞ்சு வாரியர் மற்றும் ஜிப்ரான் இணைந்து பாடியுள்ளனர். வெளியாகிய ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் இந்த பாடல் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.


பொங்கல் பண்டிகையை ஒட்டி இந்த திரைப்படம் தியேட்டரில் வெளியாக உள்ளது. இந்த படத்துடன் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “வாரிசு” திரைப்படமும் வெளியாவதால் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த படத்தை ரெட் ஜெயிண்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிடுகிறது. இதன் OTT வெளியீடு உரிமையை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.


இந்த நிலையில் இன்று வெளியான 2வது சிங்கிள் “காசேதான் கடவுளடா” பாடலை டிவிட்டரில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த பாடலின் வரிகள் நன்றாக இருப்பதாகவும், சிலர் ”சில்லா சில்லா” வை விட இந்த பாடல் செம இன்றும் ட்வீட் செய்து வருகின்றனர்.இந்த படம் இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு 50-வது படம் என்பது குறிப்பிடதக்கது.