ஜியன் கிருஸ்ணகுமார் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள த்ரில்லர் படம் ‘ரன் பேபி ரன்’ எப்படி இருக்கு என்று பார்க்கலாம்.

கதை
வங்கியில் வேலை பார்க்கும் கதையின் ஹீரோ. காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள உள்ளார். தன் வருங்கால மனைவியுடன் நகை கடைக்கு சென்று நகை வாங்கிவிட்டு காரில் செல்கிறார். அந்த காரில் ஒரு பெண் ஒளிந்திருக்கிறார். அவரால் ஹீரோ ஒரு பெரிய பிரச்னையில் மாட்டிக்கொள்கிறார். அது என்ன ? அவர் எப்படி தப்பித்தார் என்பதே மீதிக்கதை.
விமர்சனம்
ஆர்.ஜே. பாலாஜி தனது பாணியில் இல்லாமல் ஒரு த்ரில்லர் படத்தில் நடித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா சரத்குமார், விவேக் பிரசன்ன என அனைத்து நடிகர்களும் தங்களது பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளனர். த்ரில்லர் படம் என்பதால் இரவு நேர காட்சிகள் அதிகம் யுவா சிறப்பான ஒளிப்பதிவை செய்துள்ளார்.
படத்தின் முதல் பாதியின் திரைக்கதை நன்றாக இருந்தது. ஹீரோவுக்கு என்ன நடக்கும் என்ற பதைபதைப்புடன் கதை நகர்கிறது. சாம்.சி.எஸ் பிண்ணனி இசை படத்திற்கு பலம். சில லாஜிக் இல்லாத காட்சிகள் படத்தில் உள்ளது. அது படத்தின் முக்கிய காட்சியில் இருப்பதே கொஞ்சம் வேகத்தை குறைக்கிறது.
முதல் பாதியில், ஒரு ட்ராவல் பேக்கில் ‘ரகசியத்தை’ வைத்துக்கொண்டு, பாலாஜி ஒவ்வொரு இடமாகப் பதற்றத்துடன் அலைவதும், ஆங்காங்கே அவருடன் இணையும் சிறிய கதாபாத்திரங்களும் ரசிக்கும்படியாக எழுதப்பட்டிருக்கின்றன. இரண்டாம் பாதி, ஒரு த்ரில்லர் நாவலுக்கான டெம்ப்ளேட்டுக்குள் அப்படியே பொருந்திப் போகிறது. ஆனால், அதுவும் ஏற்கெனவே வாசித்து முடித்த நாவலின் உணர்வைத் தருவதுதான் சிக்கல்.
கதையின் நாயகன் ஒவ்வொருவரையும் சென்று விசாரிப்பது, தன் குற்றவுணர்ச்சியால் ஹீரோ அவதாரம் எடுப்பது எனப் பழக்கப்பட்ட காட்சிகளே நிறைந்திருக்கின்றன. திரைக்கதை பரபர என நகர்ந்தாலும், கூடவே ஆயிரம் கேள்விகளும் பின்தொடர்கின்றன. அதிலும் பிரச்னையிலிருந்து தப்பிக்க பாலாஜி எடுக்கும் முடிவுகள் படு செயற்கையாக தெரிந்தது.
சில லாஜிக் இல்லாத சீன்கள், நிறைய கேள்விகள் தோன்றினாலும், த்ரில்லர் ரசிகர்களுக்கு படம் பிடிக்க வாய்ப்பு உள்ளது.
இணைய தலைமுறை ரேட்டிங்: 3/5