துணைநிலை ஆளுநர் தமிழிசை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் நிர்வாகத்தில் தலையிட கூடாது என்றும், மத்திய அரசு ஜிப்மருக்கு வழங்கப்பட்ட தன்னாட்சி அதிகாரத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கூறியுள்ளார்.

புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். புதுச்சேரியை போன்றே யூனியன் பிரதேசமான டெல்லியில் அந்த அரசானது கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து தொடர் சட்ட போராட்டத்தை நடத்தியதை தொடர்ந்து தற்போது உச்சநீதிமன்றம் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் அமர்வு ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஒரு தீர்ப்பினை நேற்று முன்திம் வழங்கியது. அதன் அடிப்படையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்றும், அரசின் கொள்கை முடிவுகளிலும் அன்றாட நிகழ்வுகளிலும் துணைநிலை ஆளுநர் தலையிட கூடாது என்றும், அரசு துறைகளில் உயர் பதவிகளுக்கான ஐஏஎஸ் அதிகாரிகள், செயலர் உள்ளிட்ட பொறுப்புகளில் உள்ளவர்களை நியமனம் செய்வதிலும், பணி மாற்றம் செய்வதிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பளித்துள்ளதாக கூறினார்.
புதுச்சேரியில் கடந்த 2 ஆண்டுகாலமாக முதல்வர் ரங்கசாமி மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வர கூடிய இந்த சூழ்நிலையிலும் அரசுக்கு அதிகாரம் இல்லை என பொது இடத்தில் பரவலான கருத்தை கூறி வருகிறார்.
இந்த தீர்ப்பிற்கு பிறகு நமது புதுச்சேரி அரசின் முதலமைச்சர் ரங்கசாமி இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்க ஒன்று என்றும், மாநில அரசுக்குதான் அதிகாரம் உள்ளது என கருத்து தெரிவித்துள்ளார்.
அதே வேலையில் வழக்கம் போல் துணைநிலை ஆளுநர் அவர்கள் உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக அரசுக்கு போதிய அதிகாரம் இல்லை என்றும், வழங்கப்பட்ட தீர்ப்பு டெல்லிக்கு மட்டும் பொருந்தும், புதுச்சேரிக்கு பொருந்தாது என்று கருத்தினை தெரிவித்திருப்பது என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என கூறினார்.
துணைநிலை ஆளுநரின் அதிகாரம் புதுச்சேரியில் பறிக்கப்பட்டு விடுமோ என்ற எண்ணத்தில் துணைநிலை ஆளுநர் தமிழிசை இதுபோன்ற கருத்தை தெரிவித்துள்ளார் என்றும், முதல்வர் ரங்கசாமி இந்த தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும். இதற்கு பின் அரசின் அதிகாரத்தில் துணைநிலை ஆளுநரின் குறுக்கீடு இருக்குமேயானால் இந்த தீர்ப்பின் சாதக பாதகங்களை பயன்படுத்தி முதல்வர் ரங்கசாமி சட்ட வல்லுனர்களை கலந்து ஆலோசித்து சுப்ரீம் கோர்ட் சென்று டெல்லி தீர்ப்பை புதுச்சேரிக்கும் பொருந்தும் வகையில் ஒரு உத்தரவை பெற வேண்டும் என்றார்.
மேலும் ஜிப்மர் நிர்வாகம் என்பது அரசு மருத்துவமனை. எனவே மத்திய அரசு ஜிப்மருக்கு வழங்கப்பட்ட தன்னாட்சி அதிகாரத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், ஜிப்மர் மருத்துவமனையில் அரசியல் தலையீடு இருக்க கூடாது என்றும், புதுச்சேரி அரசு தலைமை மருத்துவமனை மெல்ல மெல்ல ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றப்பட்டு வருகிறது எனவும் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் குற்றம் சாட்டினார்.