அனைவருக்கும் இணைய தலைமுறையின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். ஒரு வருடத்தை நமது முன்னோர்கள் இரண்டு பகுதிகளாக பிரித்தனர். ஒன்று உத்தராயணம் மற்றொன்று தக்ஷிணாயணம். உத்தராயணத்தில் சூரியன் கிழக்கில் உதித்து வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து பின் மீண்டும் கிழக்கு திசைக்கே திரும்பும். தக்ஷிணாயணத்தில் சூரியன் கிழக்கில் உதித்து தென்கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து பின் மீண்டும் கிழக்கு திசைக்கே திரும்பும்.

எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், உத்தராயணம் வெயில் காலத்தையும், தக்ஷிணாயணம் குளிர் காலத்தையும் குறிக்கும். தை மாதம் உத்தராயணம் தொடங்குவதன் முதல் நாள். குளிர் குறையத் தொடங்கி, சூரிய வெப்பம் அதிகரிக்க தொடங்கும். சூரியனின் தெற்கு இயக்கத்திற்கு மாறாக இது மிகவும் மங்களகரமானதாகவும் கருதப்படுகிறது.
தை மாதத்தில் சூரியனின் வெப்ப காலத்தை வரவேற்க, விவசாயம் மேலோங்க, அறுவடை செய்யப்பட்ட புதிய அரிசி மற்றும் வெல்லம் சேர்த்து பொங்கல் படைத்து சூரியனை விவசாயிகள் வழிபடுகின்றனர். இது தான் பொங்கல் பண்டிகை.
பொங்கல் வரலாறு
சிவபெருமான் தனது காளையான பசவாவை, பூமிக்கு அனுப்பி மக்களை தினமும் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். மாதத்திற்கு ஒரு முறை சாப்பிட வேண்டும் என சொல்ல சொன்னார். ஆனால் பசவா மாற்றி கூறிவிட்டது. தினமும் சாப்பிட வேண்டும், மாதத்திற்கு ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என அறிவித்து விட்டது. ஆத்திரமடைந்த சிவன் பசவத்தை பூமியிலே வாழும்படி சபித்துவிட்டார். பசவா மக்களுக்கு அதிக உணவை உற்பத்தி செய்ய உதவ வேண்டும் என்று பணிக்கப்பட்டது. இதுவே கால்நடைகள் விவசாயத்துக்கு பயன்படுவதற்கு காரணம் என புராணம் கூறுகிறது.

தமிழகத்தில் பொங்கல் 4 நாட்கள் கொண்டாப்படுகிறது. மார்கழியின் கடைசி நாள், போகி பண்டிகை. மக்கள் தங்கள் பழைய உடைமைகளை அகற்றி புதிய விஷயங்களைக் கொண்டாடும் நாள். தை மாதம் முதல் நாம் பொங்கல் பண்டிகை நல்ல அறுவடை வழங்கியதற்காக சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் நாள், இந்நாளில் புதிதாக அறுவடை செய்த அரிசியுடன், வெல்லம், காய்ச்சிய பாலைக் கொண்டு சமைத்த பொங்கலை, மக்கள் சூரிய பகவானுக்கு படைத்து நன்றி தெரிவிப்பர்.
தை இரண்டாவது நாள் நாள் மாட்டுப் பொங்கல் தங்களுக்கு பால், உரங்களை வழங்குவதுடன், விவசாயத்துக்கு உதவும் கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்து, அவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு மாட்டுபொங்கல் கொண்டாடப்படுகிறது. இறுதியாக காணும் பொங்கல் அன்று, மக்கள் தங்கள் சொந்தங்களுடன் ஒன்றுகூடி ஒன்றாக உணவருந்தி கொண்டாடுகிறார்கள்.