பர்வதமலை , திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் வட்டத்தில் கடலாடி, தென்மகாதேவமங்கலம் (தென்மாதிமங்கலம்) கிராமங்களை ஒட்டி 5500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள 4560 அடி உயரம் கொண்ட ஒரு மலை.

இன்று டிராவல் பிரியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள பர்வதமலை பயணம் குறித்த தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.
பர்வதமலை பெயர் வரலாறு
பர்வதம் என்றால் மலை என்று பொருள். பர்வதமலை என்றால் மலைகளுக்கெல்லாம் மலை, மலைகளின் அரசன் என்று பொருள். பர்வதமலைக்கு நவிரமலை, தென்கயிலாயம், திரிசூலகிரி, சஞ்ஜீவிகிரி, பர்வதகிரி, கந்தமலை, மல்லிகார்ஜுனமலை, என்ற வேறு பெயர்களும் உண்டு.
மல்லிகார்ஜுனசாமி கோவில்
பர்வதமலை மீதுள்ள மல்லிகார்ஜுனர், பிரமராம்பிகை கோயில் கி.பி. 3ம் நூற்றாண்டில் நன்னன் என்ற குறுநிலமன்னன் கட்டியதாக இந்த கோவிலின் கல்வெட்டு தெரிவிக்கிறது.
இந்த மலைக்கோயிலுக்குச் செல்ல தென்மகாதேவமங்கலம் வழி, கடலாடிவழி என இருவழிகள் உள்ளன. எந்த வழியில் சென்றாலும் பாதிமலையில் இரண்டும் ஒன்றாக இணைந்துவிடுகின்றன. தென்மகாதேவமங்கலத்திலிருந்து செல்லும்போது சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவு நடந்து மலையடிவாரத்தை அடையலாம். இம்மலைக்குச் செல்வோர் வழியில் பச்சையம்மன் ஆலயத்தையும், சப்த முனிகளையும் வணங்கி, மலையடிவாரத்தில் உள்ள வீரபத்திர ஆலயத்தை வணங்கி மலையேறத்தொடங்குவர்.

அமாவாசையிலும் கூட மலையின் கீழ்ப்பகுதி முதல் உச்சி வரை இரவில் இறைவனுடைய ஒளி வழி காட்டுவது இங்கு மட்டும்தான். சித்தர்கள் வாழும் மலையான இதில் பல பேருக்கு சித்தர்கள் காட்சி கொடுத்துள்ளார்கள். வட மாநிலங்களில் செய்வதுபோல இங்கும் அவரவரே இறைவனுக்கு அபிஷேகம் செய்வது பெரிய பாக்கியம் ஆகும். இந்த பர்வதமலையை ஒரு முறை தரிசித்தால் பூமியிலுள்ள அனைத்து சிவாலயங்களையும் தரிசித்த பலன் உண்டு என்கிறது தல புராணம்.
கோட்டை
இந்த மலை கோயிலை அடையும் வழியில் ஒரு சிறிய கோட்டை உள்ளது. கோட்டையின் வாயிலாக பாழடைந்த கல்மண்டபம் ஒன்று உள்ளது. இது பாதி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. நன்னன் என்ற குறுநிலமன்னன் கட்டியது என்றும் சுமார் ஐந்து அடி அகலத்தில் கட்டப்பட்ட கோட்டை சுவர்கள் இன்றும் நல்ல நிலையில் உள்ளன. இவற்றில் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைந்ததற்கான அடிச்சுவர்கள் உள்ளன. மழைநீரை சேமித்து வைக்கும்விதமாக சிறிய குளமும் அமைந்துள்ளது.
பருவத மலையில் தீபம் ஏற்றி ஒரு நாள் அபிஷேகம் செய்தால் 365 நாட்கள் பூஜை செய்த பலன் கிடைக்கும். இந்த மலை மொத்தம் ஏழு சடைப்பரிவுகளைக் கொண்டது. 3 ஆயிரம் அடி உயரமுள்ள செங்குத்தான கடற்பாறைப்படி, தண்டவாளப்படி, ஏணிப்படி, ஆகாயப்படிகளைக் கொண்ட அதிசய மலையான இதில் எப்போதும் மூலிகைக் காற்று வீசி தீராத நோயும் தீர்க்கும்.
இம்மலையில் நூற்றுக்கணக்கான குகைகளில் சித்தர்கள் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள் என்று வரலாறு கூறுகிறது. இத்தலத்திலுள்ள சிவனின் கருவறையிலிருந்து கோயிலைச் சுற்றி நறுமண மலர்களின் வாசனையை நுகரலாம். அம்மன் அழகு வேறெங்கும் காணமுடியாத பேரழகு
டிரக்கிங் செய்யும் பக்தர்கள் கவனத்திற்கு
இந்த கோவிலை காண மலையேறி வரும் பக்தர்கள் நாமே கருவறைக்குள் சென்ற அபிஷேகம், பூஜை செய்ய அனுமதிக்கின்றனர். மேலே சோலார் சிஸ்டம் வைத்து லைட் மட்டுமே இருக்கும். கரண்ட் இருக்காது எனவே உங்கள் மொபைலை ஃபுல் சார்ஜில் வைத்து கொள்ளுங்கள்.

இந்த பயணத்தின் நடுவில் ஒரு இடத்தில் செங்குத்தாக மலை செல்லும் அங்கு டிரக்கிங் செய்பவர்களுக்கு பயங்கரமான அனுபவமாக இருக்கும். மழை பெய்யும் நேரத்தில் வழுக்க வாய்ப்பு உள்ளது. கவனமாக செல்வது நல்லது. நிறைய டிராவல்லர்கள் இப்போது செல்ல ஆரம்பித்ததால் வருபவர்கள் ஆதார் கார்ட் கொண்டு வருவது கட்டாயம் என்று கூறுகிறார்கள்.
One thought on “பர்வதமலை ஏறி சிவன் தரிசனம்”