16 ஆண்டுகளுக்கு பிறகு பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்று வருகிறது. விண்ணை பிளக்கும் அரோகரா கோஷம், பூரிப்பில் பக்தர்கள்.

16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று பழனி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பழனி மலை அடிவாரத்தில் குவிந்தனர். அதிலிருந்து 2000 பேரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து கும்பாபிஷேகம் நடக்கும் இடத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
முருகனின் 3வது படைவீடான பழனி முருகன் கோயிலில்வெகுவிமரிசையாக நடைபெற்ற குட முழுக்கு விழாவுக்காக ஏற்பாடுகளும் பிரம்மாண்டமாக செய்யப்பட்டிருந்தது. காலை 8 மணிக்கு மேல் ராஜகோபுரம், தங்க விமானம் ஆகியவற்றிற்கு புனித நதிகளில் இருந்து சேகரிக்கப்பட்டு அர்ச்சிக்கப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டது.ஹெலிக்காப்டர்கள் மூலம் கோபுரங்களுக்கும் பக்தர்களுக்கும் மலர் தூவ மற்றும் கும்பாபிஷேக நீரை பக்தர்கள் மீது தெளிக்க 8 இடங்களில் கருவிகளும் செய்யப்பட்டிருந்தன.
இதனை முன்னிட்டு மலை கோவில் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 8ஆம் கால யாக பூஜைகள் தொடங்கின. இந்த பூஜைகள் நிறைவடைந்து, கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையடுத்து இன்று காலை 8 மணி முதல் 9.30 மணிக்குள் ராஜகோபுரம், தங்க விமானத்தில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்படும்.
மக்கள் அனைவரும் அரோகரா கோஷத்துடன் முருகனை மனமகிழ வேண்டி வருகின்றனர். தமிழ் கடவுள் முருகனுக்கு தமிழில் அர்ச்சனைகள் செய்து வருகின்றனர். குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2000 பேர் இந்த கும்பாபிஷேகத்தை நேரில் பார்த்து தரிசனம் செய்து வருகின்றனர்.
காலை 9:30 மணி வரை குறிப்பிட்ட அளவு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டாலும், கும்பாபிஷேகம் முடிந்த பிறகு கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் மலைக்கோவிலுக்கு சென்று மூலவரை சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவையொட்டி இன்றைய தினம் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பழனி தண்டாயுதபாணி கோவில் பிரசாதத்தை அஞ்சல் வழியில் பெறுவதற்கான சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரூ.250 செலுத்தி பழனி பஞ்சாமிர்தம், சாமி படம், பிரசாதம் (திருநீர்) பெற்று கொள்ளலாம். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருக்கும் தலைமை தபால் நிலையம் மற்றும் துணை அஞ்சலகங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. பழனி முருகன் கோயிலுக்கு நேரடியாக செல்ல முடியாதவர்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பக்தர்கள் வசதிக்காக பழனி அடிவாரம் குடமுழுக்கு நினைவரங்கத்தில் நாள் முழுவதும் அன்னதானம் நடைபெறுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால் பழனி நகரத்தில் அதிகளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.