மார்கழி மாதம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது குளிர் மற்றும் கோயில்களில் அதிகாலை நடக்கும் பிரம்ம முகூர்த்த வழிபாடு. மார்கழி மாதத்தில் பொதுவாக என்ன செய்யலாம் என்பதை விளக்குகிறது இந்த தொகுப்பு.

தலையெழுத்து மாற உகந்த மாதம் மார்கழி மாதம், தனுர் மாதம் எனவும் குறிப்பிடப்படப்படும் இந்த மார்கழி மாதம் சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் மிகவும் உகந்த மாதம் ஆகும்.இந்த மாதம் இறைவனை வழிபாடு செய்தால் நமக்கு சகல விதமான நன்மைகளும் வந்து சேரும். பிரம்ம முகூர்த்ததில் இறைவனை வழிபாடு செய்வது சிறந்தத பலனை தரும்.
மாதங்களில் சிறந்த மாதமான மார்கழியாய் நான் இருப்பேன் என்று கிருஷ்ணர் அவதரித்து கூறியதாலோ என்னவோ இம்மாதம் அத்துணை போற்றுதலுக்கும் உரிய மாதமாக கொண்டாடப்படுகிறது.
மார்கழி மாதம்தான் நமது உடம்பில் சமநிலையையும், ஸ்திரத் தன்மையையும் கொண்டு வருவதற்கு சரியான நேரம், அதனால் யோகப் பயிற்சிகள் செய்வது மிகவும் பலனை கொடுக்கும். இந்த மாதத்தில் சிவன், விஷ்னு ஆலயங்களில் அதிகாலை திருப்பாவை, திருவம்பாவை ஒலிப்பார்கள். பிரம்ம முகூர்த்த நேரத்தில் (அதிகாலை 3.40 மணி) நீராடுவது மிகவும் நல்லது.

அனுமன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி போலவே முக்கியமான இறை வழிபாடு நாட்களும் இந்த மாதத்தில் நடைபெறும். மார்கழி மாத அதிகாலை கோலங்கள் மிகவும் அழகியல் கொண்டவை. அனைவரது வீட்டிலும் அழகான கோலம் போட்டு இறைவனை தங்களது இல்லத்திற்கு வரவேற்பார்கள். இந்த மார்கழி மாதம் காலை வேளையில் அரிசி மாவினால் கோலம் போட்டு வாசலில் 2 விளக்குகளை ஏற்றுங்கள். அரிசி மாவினால் கோலம் போடுவதால் பல ஜீவ ராசிகளுக்கு அது உணவாகும். நாம் செய்த கர்ம வினைகள் நீங்கி நம் வாழ்வில் இது முன்னேற்றத்தை கொடுக்கும். வயதானவர்களுக்கு அன்னதானம் வழங்குதல் மேன்மையை தரும், மேலும் கம்பளி மற்றும் போர்வை அவர்களுக்கு தானமாக வழங்குவதால் புண்ணியம் கிட்டும்.
மார்கழி மாதத்தில் குழந்தையில்லாதவர்கள் அரச மரம் மற்றும் வேப்பமரம் இருக்கும் இடத்தில் தம்பதி சமயதரர்களாக சுற்றி வருவதால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். மேலும் இதிலிருந்து கிடைக்கும் சுத்தமான ஆக்சிஜன் காற்று உடலுக்கு மிகவும் நல்லது. உங்கள் வீட்டின் அருகில் உள்ள சின்ன சின்ன ஆலயங்கள் அருகில் இருந்தால் தீபம் ஏற்ற எண்ணெய் வாங்கி தரலாம், பிராசதத்திற்கு உணவு பொருட்கள் வாங்கி கொடுக்கலாம். இவ்வாறு இறைவனை வழிபட்டு நமது தலையெழுத்தை மாற்றி அமைக்கலாம்.
பக்தி எனும் விதையை மக்கள் மனதில் மார்கழியில் விதைத்து, தையில் அதன் பலன்களை அறுவடை செய்யலாம் என்கிற ஒரு மென்மையான ஆன்மீக செயல்முறைதான் மார்கழியோ என எண்ணத் தோன்றுகிறது.