வெங்கட் பிரபுவின் கஸ்டடி மூவி ரிவியூ

Reading Time: 2 minutes

வெங்கட் பிரபு தெலுங்கில் இயக்குனராக அறிமுகமாகி உள்ள திரைப்படம் கஸ்டடி. தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகி உள்ள இப்படத்தில் நாக சைதன்யா நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டியும், வில்லனாக அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். கஸ்டடி படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவும், இளையராஜாவும் இணைந்து இசையமைத்து உள்ளனர். 

நேர்மையான கான்ஸ்டபிளான சிவாவிடம், பொதுமக்கள் பலரது உயிரிழப்புக்குக் காரணமான ரெளடி ராஜூ கஸ்டடியில் சிக்குகிறான். அவனை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டிய பொறுப்பு சிவாவிடம் வர, அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘கஸ்டடி’ திரைப்படத்தின் ஒன்லைன் கதை.

ஆந்திராவின் ராஜமுந்திரி பகுதியின் பரபரப்பான ஒரு முக்கிய இடத்தில் வெடிகுண்டு விபத்து ஏற்படுகிறது. பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் என பலரும் இதில் இறக்கின்றனர். இதன் பின்னணியில் இருப்பவர்களை கண்டுபிடிக்கும் பொறுப்பு சிபிஐ வசம் ஒப்படைக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த விபத்தின் பின்னணியில் இருக்கும் ரெளடி ராஜூ (அரவிந்த் சாமி), சிபிஐ அதிகாரியான சம்பத்திடம் பிடிபடுகிறார். ராஜூவை பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லும்போது எதிர்பாராதவிதமாக தவறுதலான புரிதலில் கான்ஸ்டபிள் சிவாவிடம் (நாக சைதன்யா) இருவரும் சிக்குகின்றனர்.

ராஜூவைப் பற்றி தெரிந்து கொண்டு அவரை நீதிமன்றத்தில் கொண்டு சேர்க்க சிவா தீவிரம் காட்டுகிறார். தன்னை காப்பாற்றுவார்கள் என்று நினைத்த முதல்வர் தாட்சாயிணி (பிரியாமணி), காவல் உயரதிகாரி நடராஜன் (சரத்குமார்) ஆகியோரே அரவிந்த்சாமிக்கு எதிராக திரும்புகின்றனர். இதற்கு என்ன காரணம்? ராஜூ விஷயத்தில் கான்ஸ்டபிள் சிவா இவ்வளவு தீவிரம் காட்டுவது ஏன்? ராஜூவை பெங்களூரு நீதிமன்றத்தில் அவர் ஒப்படைத்தாரா? என்ற கேள்விகளுக்கு எல்லாம் விடையாக விரிகிறது ‘கஸ்டடி’ திரைப்படம்.

’கஸ்டடி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி இருக்கிறார் நாக சைதன்யா. கான்ஸ்டபிள் சிவாவாக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நேர்மையான அதிகாரி கதாபாத்திரம். ஆனால், அவரது தோற்றம், நடிப்பு, தமிழ் டப்பிங் என எதுவும் அந்த கதாபாத்திரத்தோடு பொருந்திப் போகாமல் அந்நியமாக இருக்கிறது. கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி. வழக்கமான கமர்ஷியல் பட கதாநாயகியாக கடந்து போகிறார்.

அரவிந்த் சாமி, சரத்குமார், ராம்கி, பிரியாமணி என சீனியர் நடிகர்கள் அனைவரும் நடிப்பில் குறை வைக்காமல் தங்கள் கதாபாத்திரங்களை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். குறிப்பாக, நாக சைதன்யாவுடன் வண்டியில் செல்லும்போது கீர்த்தி ஷெட்டி, சம்பத் இவர்களுடன் அரவிந்த் சாமி நடத்தும் ரகளையான கான்வர்சேஷனும், ராம்கி, பிரேம்ஜிக்கான ஒரு காட்சியில் வெங்கட்பிரபுவின் திரைக்கதை குறும்பும் ரசிக்க வைக்கிறது.

தொண்ணூறுகளில் நடக்கும் கதை எனும்போது, அதற்கேற்ற இசை, செட், ரிப்பன், டிஃபன் பாக்ஸ், சாக்லெட் என சின்னச் சின்ன டீட்டெயிலிங்கும் படத்தில் கவனம் ஈர்க்கிறது. எஸ்.ஆர். கதிரின் ஒளிப்பதிவில் அணையின் டனலுக்குள் நடக்கும் பரபர சண்டைக் காட்சிகளும், ரயில் சேஸிங் காட்சிகளும் பார்வையாளர்களை கட்டிப் போடுகிறது. முன்பாதி காதல் காட்சிகள், ஃப்ளாஷ்பேக் பகுதிகளுக்கு இசை இளையராஜா என்றால், பரபர ஆக்‌ஷன் காட்சிகளிலும், படத்தின் முக்கிய கதாபாத்திரங்களுக்கான பின்னணி இசையிலும் அதகளம் செய்திருக்கிறார் யுவன். ஆங்காங்கே ‘மாநாடு’ பின்னணி இசையும் நினைவுக்கு வந்து போகிறது. இளையராஜா இருந்தும் பாடல்கள் எல்லாம் சுமார் ரகம் தான்.

அரவிந்த் சாமிக்கான பின்னணி தெளிவில்லாமல் இருப்பது, முதல் பாதியில் கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் இருக்கும் பொறுமையைச் சோதிக்கும் காதல் காட்சிகள், அடுத்தடுத்து யூகிக்கும் படியான திரைக்கதை, நாக சைதன்யாவுக்கான ஃப்ளாஷ்பேக் காட்சியில் அழுத்தம் இல்லாதது என ஒரு கட்டத்திற்கு மேல், ‘கஸ்டடி’யில் இருந்து எங்களை எப்போது வெளியே விடுவீர்கள் என்ற மனநிலையை பார்வையாளர்களுக்கு கொடுத்து அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. போதாக்குறைக்கு, பல இடங்களில் தெலுங்கு நெடி அதிகம் இருக்கிறது.

’மாநாடு’ படத்தைப் பார்த்துவிட்டு அதே எதிர்பார்ப்பில் செல்பவர்களுக்கு ‘கஸ்டடி’ ஏமாற்றம் தரலாம்.

இணைய தலைமுறை ரேட்டிங்: 2.5/3

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d