ஐக்கிய நாடுகள் சபையின் COP 15 பல்லுயிர்ச்சூழல் பாதுகாப்பு உச்சி மாநாடு மான்ட்ரியால் நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பர் 7-ஆம் தேதி தொடங்கிய இந்த உச்சி மாநாடு, 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில், 193 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்வது, உலகில் உள்ள நிலம் மற்றும் கடல் பரப்பில் 30 சதவீதத்தை பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட மொத்தம் 24 இலக்குகளை முன்வைத்து இந்த உச்சி மாநாடு நடத்தப்படுகிறது.உச்சி மாநாட்டின் முடிவில் காலநிலை மற்றும் பல்லுயிர்ச்சூழல் தொடர்பான முக்கியத் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பல்லுயிர்ச்சூழல் பாதுகாப்பு குறித்து வலுவான ஒரு முடிவை இந்த உச்சி மாநாட்டில் எட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி, பறவைகள், மரங்கள், கரீபூ மான் போன்ற வேடம் அணிந்த நூற்றுக்கணக்கானவர்கள், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், முழக்கங்கள் எழுப்பியபடி பேரணியாகச் சென்றனர். பேரணியாகச் சென்றவர்களுக்கு, காவல் துறையினர் குதிரைகளிலும், சைக்கிளிலும் வந்து பாதுகாப்பு அளித்தனர்.
2030-க்குப் பிறகான பல்லுயிர்ச்சூழல் பாதுகாப்பு குறித்த முக்கியமான பல தீர்மானங்கள் மீது முடிவுகள் மேற்கொள்ள, பல நாடுகளின் தலைவர்கள் அடுத்த வாரம் மான்ட்ரியால் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“கொள்கை ரீதியான தீர்மானத்துடன் செயல்பட எங்களுக்கு ஒரு சில நாட்கள் மட்டுமே உள்ளன. நடவடிக்கை தைரியமாக இருக்க வேண்டும் – எனவே நாங்கள் ஒப்பந்தத்தை முடிக்க வேண்டும் ” என்று யு.என்.இ.பி.யின் நிர்வாக இயக்குனர் இங்கர் ஆண்டர்சன் கூறினார்.
நமது சுற்றுச்சூழலின் ஆரோக்கியம் இறுதியில் மக்களின் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்துகிறது.