கேரளா கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட பூமி என்று அழைக்கப்படும் மாநிலம் . அந்த கேரள மாநிலத்தில் உள்ள அழகிய வயநாடு மலைப்பகுதியை பைக்கில் சுற்றி பார்க்க ரெடியா?

வயநாடு, சென்னையில் இருந்து 600 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை எப்போது சென்றாலும் இதன் கிளைமேட் மிகவும் சூப்பராக இருக்கும். அங்கு ஏலக்காய் முதல் இலந்தப்பழம் வரை அனைத்தையும் சுவைக்கலாம். அருவியில் குளித்து என்ஜாய் பண்ணலாம். வயநாடு டிரி்ப்பை முழுசா அனுபவிக்க, சென்னையில் இருந்து பைக் ரைடு சிறப்பான தேர்வு.
சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலை வழியாக வேலூர், ஆம்பூரை கடந்து பெங்களுரு சிட்டிக்குள் நுழைந்தவுடன், எலக்ட்ரானிக் சிட்டி பாலத்தின் மீது ஏறாமல் கீழே சென்றால் கணக்கூறா சாலை வரும் அந்த வழியைக் கடந்து மைசூர் நைஸ் ரோடு வழியாக போகலாம். மைசூர் எக்ஸ்பிரஸ் ரோட்டில் பைக்கில் செல்லும் வழியை என்ஜாய் செய்வீர்கள். ஆனால் 100 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் போனால் இஞ்சின் அதிகமாக சூடாகும். பைக்கை அவ்வபோது நிறுத்த வேண்டியிருக்கும். நீங்கள் மாலை 3 மணிக்கு பைக்கில் கிளம்பினால் 8 மணிக்கெல்லாம் பெங்களூரை அடைந்து விடலாம்.

அதிகாலை பெங்களுரில் இருந்து கிளம்பினால் பயணத்துக்கு சரியாக இருக்கும். கனப்புத்ராவை தாண்டி, அதே சாலையில் செல்லாமல், மத்ரு, மலவள்ளி, சாமராஜ் நகர் வழியாக பயணித்தால் பெட்ரோல் மிச்சம் பிடிக்கலாம்.
பெங்களூரில் இருந்து இந்த வழியாக பயணித்தால் ஆறு மணி நேரத்தில் வந்திப்பூரை அடைந்துவிடுவோம். புலி மற்றும் சிறுத்தைகள் வாழும் காடு வந்திப்பூர். அடர்ந்த மரங்கள் இருக்காது, பாதைகள் வளைந்து நெளிந்து போகும். பாதைகள் நன்றாக இருக்கும் இடையில் ஸ்பீட் பிரேக்கர்கள் அதிகம் உண்டு கவனமாக பயணிப்பது நல்லது. அதை தொடர்ந்து முத்தங்காவை அடுத்து 30 நிமிட பயணத்தில் வயநாடு வந்துவிடும்.

வயநாடு பாதை பல கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. வளைந்து வளைந்து பயணிப்பது செம த்ரில்லிங்காக இருக்கும். வயநாடு வருவதற்கு மாண்டியா மன்சூர் வழியாக இன்னொரு பாதையும் உள்ளது. நம் பாதையை விட அந்த பாதையின் தூரம் குறைவு, ஆனால் முழுவதும் நெடுஞ்சாலையில் மட்டுமே பயணிக்க வேண்டும்.
வயநாடு பார்த்துவிட்டு அங்கு இன்னும் இரண்டு நாள் இருக்கலாம் என முடிவெடுத்துவிட்டால், அங்கிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் கோழிக்கோடு கடற்கரை உள்ளது. 60 கிலோமீட்டர் தொலைவில் மசினகுடி உள்ளது. அருகிலேயே தெங்குமரஹடா காடு உள்ளது. அங்கு போக வனத்துறை அதிகாரிகளின் அனுமதி வேண்டும். வந்திப்பூர் , நாகர்ஹோளே இரண்டு காடுகளுக்குள்ளும் இரவு 10 மணிக்கு மேல் அனுமதி கிடையாது. அதனால் அதற்கு ஏற்ப உங்களது பயணத்தை திட்டமிட்டால், சரியான நேரத்தில் வயநாடை சென்றடையலாம்.