நண்பகல் நேரத்து மயக்கம் திரைவிமர்சனம்

Reading Time: 2 minutes

மலையாள நடிகர் மம்முட்டி, ரம்யா பாண்டியன் நடிப்பில் வெளியாகி உள்ள “நண்பகல் நேரத்து மயக்கம்” திரைப்படம் எப்படி இருக்கு என்று பார்க்கலாம்.

nanpagal nerathu mayakkam tamil review

இந்த படத்தை மலையாள இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கியுள்ளார். மம்முட்டியுடன் ரம்யா பாண்டியன், மறைந்த நடிகர் பூ ராமு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆமென் மூவி மோனாஸ்ட்ரி மற்றும் நடிகர் மம்முட்டி இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர். தமிழ், மலையாளம் என இருமொழிகளிலும் இந்த படம் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டின் பழனி பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது குறிப்பிடத்தக்கது.

கதை

மலையாள நாடகக் கலைஞர்கள் சிலரை ஏற்றிச் சென்ற பேருந்து வேளாங்கன்னியில் இருந்து செல்லும் வழியில் ஜேம்ஸ் (மம்முட்டி) என்பவர் கேட்டுக்கொண்டதால் ஒரு கிராமத்தில் நிற்கிறது. அந்த கிராமத்திற்குச் செல்லும் அவர், சுந்தரம் என்ற காணாமல் போனவர் போல நடந்து கொள்ளத் தொடங்குகிறார். அவரை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் கிராமத்தில் இருப்பவர்களும், அவருடன் வந்தவர்களும் தவிக்கின்றனர். என்ன நடந்தது என்பதே மீதிக்கதை.

விமர்சனம்

இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி படத்தை இயல்பான நகைச்சுவையுடன் சேர்த்து ஆழமான சிந்தனைகள் சேர்த்து மிக தெளிவான படத்தை கொடுத்துள்ளார். திரைக்கதை எழுதியுள்ளார் எஸ்.ஹரீஷ்.

படத்தில் மம்முட்டியின் கதாபாத்திரத்தின் பெயர் ஜேம்ஸ். ஜேம்ஸ் என்ற ஒருவன் தமிழ்நாட்டின் கிராமத்தில் சுந்தரம் என்று தன்னை நினைத்து கொண்டு அங்கு செல்கிறார். பின்னர் அங்கு நடக்கும் சம்பவங்களை சுவாரசியமாக மிகவும் ரசிக்கும் விதத்தில் படமாக்கியிருப்பார்கள். படம் தமிழ், மலையாளம் என இரு மொழி கலந்து வருகிறது. தமிழ் ரசிகர்கள் கண்டிப்பாக ரசிக்க முடியும். தமிழ் தெரியாத மலையாளிகளுக்கு இந்த படம் சற்று சில வசனங்களில் கனெக்ட் கொடுக்காமல் இருக்க வாய்ப்பு உள்ளது.

இந்த படத்திற்கு என்று தனியாக பாடல்கள் இல்லை. பழைய திரைப்படங்களின் பாடல்கள் மற்றும் இசையை சரியாக படத்தின் பல இடங்களில் பயன்படுத்தியிருக்கிறார்கள். படத்தின் நகர்வுக்கு அந்த பாடல்கள் மிகவும் உதவியுள்ளது என்றே கூறலாம்.

தேனி ஈஸ்வரனின் ஒளிப்பதிவு காட்சியை கண்களில் இதமாக பதிய வைக்கிறது. தீபு ஜோசப்பின் எடிட்டிங் படத்திற்கு பலம். ரம்யா பாண்டியன், பூ ராமு மற்றும் பலர் தங்களது கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக நடித்துள்ளனர். ஸ்லோ டிராமா உங்களுக்கு பிடிக்கும் என்றால் இந்த படமும் உங்களுக்கு பிடிக்கும். மொத்தத்தில் ஒரு நகைச்சுவை டிராமா, நிறைய சிந்தனைகள், மம்முட்டி யின் அருமையான நடிப்பு என்று சினிமா ரசிகர்களை கவர்ந்துள்ளது இந்த “நண்பகல் நேரத்து மயக்கம்”.

இணைய தலைமுறை ரேட்டிங்: 4/5

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d