எஃப்ஏஎம்இ-திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று கனரக தொழில் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய கனரகத் தொழில்துறை அமைச்சகம் எஃப்.ஏ.எம்.இ. திட்டத்தின் கீழ், இந்தியாவில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்வது மற்றும் அதனை விரிவு படுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. எஃப்ஏஎம்இ-திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று கனரக தொழில் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய கனரகத் தொழில்துறை இணை மந்திரி கிருஷன்பால் குஜார் பாராளுமன்ற மாநிலங்களவையில் இது தொடர்பாக உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், 25 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் 68 நகரங்களில் 2,877 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களுக்கு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும்,இதன்படி 9 அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் 16 நெடுஞ்சாலைகளில் 1576 சார்ஜிங் நிலையங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஃபேம் இந்தியா திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் சார்ஜிங் உள்கட்டமைப்பை உருவாக்க 520 சார்ஜிங் நிலையங்களுக்கு கனரக தொழில் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.அதிகப்பட்சமாக மகாராஷ்டிராவுக்கு 317 சார்ஜிங் நிலையங்களுக்கும், ஆந்திரப் பிரதேசத்தில் 266 சார்ஜிங் நிலையங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது