உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.

அதேநேரத்தில், ரஷ்யா உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெய் மீதான விலைக்கு வரம்பு நிர்ணயித்து ஜி7 மற்றும் அதன் நட்பு நாடுகள் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டன. ஆனால், இந்த விலை வரம்பு அறிவிப்புக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்க மறுத்துவிட்டது. ஜி7 நாடுகளின் அறிவிப்பு, சர்வதேச சந்தை நடைமுறைகளுக்கு எதிரானது என்றும், இது, உலக அளவிலான எரிசக்தி விநியோகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.
இதற்காக, ரஷ்யாவுக்கான இந்தியத் தூதர் பவன் கபூர் உடனான சந்திப்பின்போது, இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக ரஷ்ய துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவாக் தெரிவித்தார். இச் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம், எண்ணெய் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருள்கள் ஏற்றுமதி, இயற்கை எரிவாயு, நிலக்கரி, உரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளின் பரஸ்பர ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

உக்ரைன் போருக்குப் பிறகும், ரஷ்யாவில் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் சுமார் 1 கோடியே 64 லட்சம் டன் கச்சா எண்ணெய் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.