வங்க கடலில் புயல் உருவாகும் நிலையில் வரும் வெள்ளிக்கிழமை தமிழகத்தில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று நாளை புயலாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் 8 மற்றும் 9ம் தேதிகளில் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நெருங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்றும், நாளையும் தமிழகத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும், 8ம் தேதி கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வரும் 9ம் தேதி வெள்ளிக்கிழமை தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருவார்ரு, நாகை, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 15 மாவட்டங்களில் மிக கனமழையும், ஓரிரு மாவட்டங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.