பல பெரிய IT நிறுவனங்கள் கடந்த மாதம் முதல் செலவுகளை குறைக்க ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. இந்த நிலையில் அமேசான் மற்றும் கூகுள் விரைவில் மிகப்பெரிய அளிவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

செலவுகளைக் குறைப்பதற்காக பல தொழில்நுட்ப நிறுவனங்கள் கடந்த மாதங்களில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன. ட்விட்டரை ரூ.3½ லட்சம் கோடிக்கு வாங்கிய எலான் மஸ்க், அந்த நிறுவனத்தில் பணியாற்றிய 4 ஆயிரம் ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்தார். அதனை தொடர்ந்து Meta நிறுவனம் மொத்த பணியாளர்களில் 13 சதவீதம் கிட்டதட்ட 11 ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியது, அமேசான் நிறுவனம் உலகம் முழுவதும் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இதனை தொடர்ந்து இந்திய ஸ்டார்ட் அப் கம்பெனிகளும் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய தொடங்கி உள்ளது.

உலகளவில் இதுவரை 853 தொழில்நுட்ப நிறுவனங்கள் இன்று வரை சுமார் 1,37,492 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன. அமேசான் மற்றும் கூகுள் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
- ஏற்கனவே ஊழியர்களை பணிநீக்கம் செய்த அமேசான் நிறுவனம், மேலும் சுமார் 20,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
- அமேசான் நிறுவனத்தின் நீண்ட கால ஆரோக்கியம் குறித்து தலைவர்கள் தங்கள் குழுக்களுடன் ஆலோசித்து வருவதாகவும், இந்த பணிநீக்கங்கள் 2023 வரை தொடரும் என்று அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி கூறினார்.
- ” கம்பெனியின் வருடாந்திர திட்டமிடலை அடுத்த வருடம் ஜனவரி மாதம் வரை நீட்டித்து வைத்துள்ளோம், இதனால் 20223 ம் ஆண்டு மேலும் அதிக நபர்கள் பணி நீக்கம் செய்யும் நிலை ஏற்படலாம். இந்த முடிவுகள் குறித்து பாதிக்கப்படும் பணியாளர்களுக்கு கூடிய விரைவில் இமெயில் மூலம் தெரிவிக்கப்படும்” என்று தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி கூறியுள்ளார்.
- கூகுள் நிறுவனமும் கூடிய விரைவில் பெரிய அளவில் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த எண்ணிக்கை குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.
இதுவரை நிறைய கம்பெனிகள் தங்களது அறிவிப்பை வெளியிட்டுள்ளனர், மேலும் பல கம்பெனிகள் வரும் நாட்களில் தங்களது முடிவை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 2023ம் தொடங்கும் இந்த நிலையில் இதுபோன்ற செய்திகள் வருவது சற்று நடுக்கமாகதான் இருக்கிறது. பாதிக்கப்பட்ட பணியாளர்களின் நிலை என்ன? பணி நீக்கம் செய்யப்படும் இத்தனை நபர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் நிலை இப்போது உள்ளதா என்பது பெரிய கேள்விக் குறியாகவே உள்ளது.