எத்தியோப்பியாவில் இருந்து குடியேறிய 27 பேரின் சடலங்கள் ஜாம்பியா தலைநகரின் புறநகரில் உள்ள ஒரு விவசாயப் பகுதியில் வீசப்பட்டதை ஜாம்பியா போலீசார் ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடித்தனர்.
ஜாம்பியா தலைநகர் லுசாகாவின் வட பகுதியில் உள்ள என்வெரேரே என்ற இடத்தில் சாலையோரத்தில் 27 சடலங்கள் கிடப்பதாக, காவல் துறையினருக்குத் தகவல் வந்தது. விரைந்து வந்த காவல் துறையினர், சாலையோரம் கிடந்தவர்களைச் சோதனை செய்ததில், ஒருவர் மூச்சுத்திணறலோடு காணப்பட்டார். அவரை உடனே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்றவர்களைச் சோதித்ததில், அவர்கள் அனைவரும் இறந்திருப்பது தெரியவந்தது.
20 முதல் 38 வயதுள்ள அந்த ஆண் சடலங்களில் இருந்த அடையாள அட்டைகளை வைத்து, அவர்கள் அனைவரும் எத்தியோப்பியா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் அனைவரும் மூச்சுத்திணறி இறந்துள்ளதாகவும் காவல் துறை செய்தித் தொடர்பாளர் டானி எம்வேல் தெரிவித்தார்.
பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் தென் ஆப்பிரிக்காவுக்கு சட்டவிரோதமாக புலம் பெயர்ந்து செல்ல ஜாம்பியா நாட்டையே முக்கிய வழித்தடமாகப் பயன்படுத்துகின்றனர். சாலையோரம் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டவர்களும், இப்படி புலம் பெயர்ந்து சென்றவர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கடந்த அக்டோபரில், மலாவி நாட்டிலும் இதுபோல் எத்தியோப்பியா நாட்டைச் சேர்ந்த 25 பேரின் சடலங்கள் சாலையோரம் கிடந்தன என்பதும்,
இச் சம்பவத்தின் பின்னணியில், மலாவி நாட்டின் முன்னாள் அதிபர் பீட்டர் முத்தாரிகாவின் வளர்ப்பு மகன் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.