கார்த்திகை தீபம் வழிபாட்டு முறைகள்

Reading Time: 2 minutes

கார்த்திகைத் திருநாளன்று காலையில் குளித்த பிறகு சிவனைத் துதிக்க வேண்டும். நெற்றியில் திருநீறு அணிந்து வில்வ இலையால் அர்ச்சிக்க வேண்டும். பருப்பு வடை, பருப்பு வெல்லப் பாயசம், சாம்பார், அன்னம் முதலியவற்றைச் சமைத்துச் சிவன் பார்வதிக்கு படையலிட வேண்டும்.

இந்த நிவேதனங்கள் காளிக்கும் உகந்தவை என்பதால் அத்தெய்வத்தையும் திருப்தி அடையச் செய்யும் என்பது ஐதீகம். அவல் பொரி, நெல்பொரி ஆகியவற்றில் பாகு சேர்த்து, உருண்டை பிடிக்க வேண்டும். உருண்டையாகப் பிடிக்க வராவிட்டாலும் பரவாயில்லை. வெல்ல அப்பம், வேர்க்கடலை உருண்டை ஆகியவற்றைச் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அகல் விளக்குகளைக் காலையில் அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவிட வேண்டும். பின்னர் அவற்றை எடுத்துச் சுத்தமாகத் துடைத்து, ஆற விட வேண்டும். சந்தனம், குங்குமம் இட வேண்டும். பஞ்சு அல்லது நூல் திரி போட்டு, நல்லெண்ணெய்விட்டு விளக்குகளைப் பூஜை அறை அல்லது பூஜை அலமாரிக்கு அடியில், கோலமிட்ட மனைபலகையில் அழகாக அடுக்க வேண்டும். திரியின் நுனியில் கற்பூரத்துகள்கள் போட்டு வைத்தால், தீபத்தை எளிதில் ஏற்றிவிடலாம்.

மலையில் அண்ணாமலை தீபம் ஏற்றியபின் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றும் வழக்கத்தைச் சிலர் கொண்டிருப்பார்கள். அவ்வாறே தீபம் ஏற்றும்போது அண்ணாமலைக்கு அரோகரா என்ற பக்தி கோஷம் போட வேண்டும். தயாராக உள்ள பொரி உருண்டை, அப்பம், வேர்க்கடலை உருண்டை ஆகியவற்றை நிவேதனம் செய்ய வேண்டும். ஒவ்வோர் ஆண்டும், வெற்றிலை பாக்கு, பழம், பூ மற்றும் சன்மானத்துடன் சகோதரன் வாங்கிக் கொடுக்கும் புதிய விளக்குகளைத் தவறாமல் ஏற்ற வேண்டும். ஏற்றிய விளக்குகளை வாசலில் அணிவகுத்தாற் போல் வரிசையாக வைக்க வேண்டும்.

வீட்டின் ஒவ்வொரு அறையிலும் குளியல் அறை உட்பட அனைத்து இடத்திலும் ஒரு விளக்காவது வைக்க வேண்டும். தீபாவளிக்கு வாங்கிய மீதமுள்ள பட்டாசுகளை வெடித்துத் தீர்த்துவிடலாம். அன்றைய தினம் சிவன் கோயிலுக்குச் சென்று சிவ தரிசனம் செய்வது மிகுந்த புண்ணியத்தை அளிக்கும் என்பது நம்பிக்கை.

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d