பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று டெஸ்டுகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. ராவல்பிண்டியில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதையடுத்து, முல்தானில் இரண்டாவது போட்டி நடைபெற்றது.

முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி, தனது முதல் இன்னிங்ஸில் 281 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியில், அறிமுக வீரர் அப்ரார் அஹமத் 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் 202 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணியில் ஜாக் லீச், 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
79 ரன்கள் முன்னிலையுடன், இங்கிலாந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடியது. ஹாரி புரூக் சதம் விளைசினார். அவர் 108 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இங்கிலாந்து அணி 275 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, 355 ரன்கள் என்ற இலக்குடன் பாகிஸ்தான் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. நான்காம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி நாளில் 157 ரன்கள் எடுத்தால் வெற்றிபெறலாம் என்ற நிலையில் திங்கள்கிழமை தனது ஆட்டத்தைத் தொடர்ந்தது. ஆனால், 328 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இங்கிலாந்து அணியில் மார்க் உட், 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்த ஹாரி புரூக், ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியை அடுத்து, மூன்று டெஸ்டுகள் கொண்ட தொடரை இரண்டுக்கு பூஜ்ஜியம் <<2-0>> என்ற கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட், கராச்சியில் 17-ஆம் தேதி தொடங்குகிறது.
கடந்த 22 ஆண்டுகளுக்குப் பிறகு, பாகிஸ்தானில் தனது முதல் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.